சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மதேவன் பொய் கூறியதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதனால் மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். பிரம்மா படைப்புத் தொழிலை சரிவர செய்யாததால் நவக்கிரங்களும் தங்களது பணிகளை சரியாகச் செய்யத் தவறின. அவைகளும் இங்கு வந்து வழிபட்டன. கோள்களுக்கு வந்த தோஷம் நீங்கியதால் இத்தலம் 'கோளிலி' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்து மூலவர் 'கோளிலிநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். மணலால் செய்யப்பட்ட லிங்க மூர்த்தியாதலால் மூலவர் மீது குவளை சாத்தப்பட்டுள்ளது. அதனால் இத்தலம் 'திருக்குவளை' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று குவளையை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னர் குவளை சாத்தப்படும். அம்பிகை 'வண்டமர் பூங்குழலம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்ரமண்யர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
இக்கோயில் சப்தவிடங்க தலங்களுள் அவனி விடங்கத் தலம். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'பிரமர நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது வண்டு பறப்பது போல் இருப்பது இந்நடனமாகும். முசுகுந்த சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர், திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். மரகத லிங்கம் உள்ளது.
சுந்தரர் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதற்கு நெல் கேட்டபோது சிவபெருமான் அளித்த தலம். இவ்வூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் கிழாரிடம் வாங்கிக் கொள்ளச் செய்து, அங்கிருந்து திருவாரூரில் பெறச் செய்த தலம்.
மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, நவக்கிரகங்கள், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் குண்டையூர் கிழார் வந்து வழிபட்ட தலம். பகாசுரனை கொன்ற தோஷத்தைப் போக்கிக் கொள்ள பீமன் இங்கு வந்து வழிபட்டான். பகாசுரன் உருவம் கோயில் முன்கோபுரத்தில் உள்ளது. மதுரையை தரிசிக்க விரும்பிய குண்டையூர் கிழாருக்கு இங்கேயே மதுரை தரிசனம் கொடுத்த தலம்.
நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால் இக்கோயிலில் அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|